நலன்புரி உதவித் திட்டப் பதிவுகளில் முறைகேடு - வவுனியாவில் வீதியை மறித்து மக்கள் போராட்டம்
அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா - சிதம்பரபுரம் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.
இன்று (27) காலை 9.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியுடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டமை.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராமங்களை சேர்ந்த மக்களினால் இக் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது போராட்டம் ஆரம்பித்து 30 நிமிடங்களின் பின்னர் பேரணியாக சென்று வவுனியா - சிதம்பரபுரம் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
போக்குவரத்து தடைப்பட்டமை
இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகை தந்த சிதம்பரபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஆசிகுளம் கிராம சேவையாளர் , சமூரத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.
இதேவேளை மேல் முறையீடு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மற்றும் அதற்குரிய உதவிகளைப் பெற்றுத்தருவதுடன் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் மேலும் இறுதிப்பட்டியல் வரும் வரை காத்திருக்குமாறும் ஆசிகுளம் கிராம சேவையாளர் தெரிவித்ததை அடுத்து காலை 11.00 மணியளவில் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
