“ அஸ்வெசும” திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை 190,000 முறையீடுகள்
இரண்டாம் இணைப்பு
‘அஸ்வெசும’ எனும் ஆறுதல் நலன்புரி திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை 190,000 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதன்படி, இதுவரை 188,794 முறையீடுகளும் 3,304 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளுக்கு, பொது மக்கள், வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயற்படும் ‘1924’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.
‘அஸ்வெசும’ னும் ஆறுதல் நலன்புரி திட்டத்தின் கீழ் மக்கள் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களில் தனிப்பட்ட முறையில் கையளிப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
சிறிலங்கா அரசாங்கத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்வெசும எனும் ஆறுதல் நலன்புரி திட்டத்துக்கு எதிராக இதுவரை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மேன்முறையீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபையின் உறுப்பினரான கமல் பத்மசிறி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தால் அஸ்வெசும எனும் புதிய ஆறுதல் நலன்புரி திட்டம் கடந்த 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
ஒரு இலட்சத்துக்கு அதிகமான மேன்முறையீடுகள்
இதனைத் தொடர்ந்து, குறித்த திட்டத்தை அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் விமர்சித்திருந்தனர்.
இந்த பின்னணியில், திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆறு நாட்களுக்குள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், மேன்முறையீடுகள் மாத்திரமன்றி, குறித்த திட்டம் தொடர்பான ஆட்சேபனைகளையும் மக்கள் முன்வைக்கலாம் என சபையின் உறுப்பினரான கமல் பத்மசிறி கூறியுள்ளார்.
அத்துடன் குறித்த ஆட்சேபனைகளை பெயர் குறிப்பிடாமல் சமர்ப்பிக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
