கொழும்பில் இடம்பெற்ற தாக்குதல்: குற்றச்சாட்டை மறுத்த ஜே.வி.பி தரப்பு
தமது கட்சியின் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியதாக தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி முன்வைக்கும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) நேற்றையதினம் (12) தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி அமைப்பினால் நடத்தப்பட்ட கூட்டமொன்றுக்கு ஜே.வி.பியின் ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில், இந்தத் தாக்குதலுக்கும் தமது கட்சியைச் சேர்ந்த எவருக்கும் தொடர்பில்லை என அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியினால் நேற்று தேசிய நூலகம் மற்றும் ஆவண நிலைய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் மோதல் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், ஜே.வி.பி.யின் வனத்தமுல்ல பகுதியைச் சேர்ந்த அமைப்பாளர் உள்ளிட்ட குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் பல்லந்துடாவ குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில், தாக்குதலுக்கும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கும் எதுவித தொடர்பும் இல்லை என அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |