கிளிநொச்சியில் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மீது தாக்குதல் – பெண்கள் உள்ளிட்ட பலர் கைது
கிளிநொச்சியில் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் சோதனை நடத்தச் சென்ற காவல்துறை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 16 முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களும், 26 முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண் சந்தேகநபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை
இராமநாதபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை நடத்தி சந்தேக நபரொருவரை அதிகாரிகள் கைது செய்தபோது, இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் அங்கு வந்த குழுவொன்று அதிகாரிகளைத் தாக்கி, சந்தேகநபரை விடுவித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இராமநாதபுரம் காவல்துறை நிலைய அதிகாரிகள் குழுவொன்று இந்தக் குழுவினரை கைது செய்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இன்று (03) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |