கறுப்பு ஜூலை “பொது நினைவேந்தலும் - விடுதலைக்கான போராட்டமும்“ : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை ''பொது நினைவேந்தலும் - விடுதலைக்கான போராட்டமும்'' யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) - கிட்டுப் பூங்காவில் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பபாளர் மு.கோமகன் யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் (16) நடாத்திய ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கான நீதி
அவர் மேலும் தெரிவிக்கையில், ”இதுவரை காலமும் இலங்கையின் கொடூர சிறைக்கூடங்களுக்குள் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நீதி நியாயத்தை கோருகின்ற 'பொது நினைவேந்தலும்' 30 ஆண்டுகள் கடந்தும் விடுதலையின்றி சிறைகளுக்குள் வாடிக்கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நூதன கவனயீர்ப்புப் போராட்டமும்' மக்களது ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்வாறான அறப் பணிகளை தொடர்ந்து தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பட்சத்திலேயே, சமூகத்தின் பெயரில் சிறைவாடும் எமது உறவுகளான 'தமிழ் அரசியல் கைதிகளுக்கு' நீதி நியாயமும் விடுதலையும் கிடைக்கப்பெறும் எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மனிதநேயம் கொண்ட நல்லுள்ளங்கள் ஒருங்கிணைந்து முன்னெடுப்புகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையிலான உதவிகளை, " விடுதலைக்கான திறவுகோல்களை கனதியாக்குவோம் " என்கின்ற 'உண்டியல் திட்டத்தின் ஊடாக' மனமுவந்து நல்க வேண்டுமென அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.
விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
இந்தப் பொதுவெளி கவனயீஈர்ப்புப் போராட்டத்தில், இன மத மொழி கடந்து, வயது பால் வேறுபாடின்றி, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைவோம். சமூகநீதி சமூகநியாயத்தும் விடுதலைப் பயணம் நோக்கிய செயற்பாடுகளை பலப்படுத்தி முன்நகர்வோம்.
நல்லெண்ணமும் கருணை உள்ளமும் கொண்ட அனைவரும் சிரமம் பாராது வந்து கலந்து கொள்வதன் மூலமே, இலங்கை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் ஒரு திரட்சிமிகு அழுத்தத்தை கொடுத்து அன்புக்குரிய எமது சிறையுறவுகளை உயிர்ப்புடன் விடுவிக்க முடியும்.
அனைவரும் " ஒன்றிணைந்து குரல் கொடுத்து உறவுகளை சிறை மீட்போம் வாருங்கள்..! " என 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினராகிய நாம் எமது மக்களை நோக்கி உரிமையோடு அழைப்பு விடுக்கின்றோம்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




