எலிசபெத் மகாராணியின் வாக்குகள் திரும்புகின்றதா.. அதிர்ச்சியில் மன்னர் குடும்பம்!
ஆட்சிப்பொறுப்பேற்று 40 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் தொலைக்காட்சியில் உரையாற்றிய மறைந்த எலிசபெத் மகாராணியார், இது ஒரு துரதிர்ஷ்டமான ஆண்டு அல்லது பயங்கரமான ஒரு ஆண்டு என்று பொருள் படும் வகையில், ’annus horribilis’ என்னும் பதத்தைப் பயன்படுத்தினார்.
இதற்கு காரணம், அப்போதுதான் இளவரசர் சார்லசும் அவரது மனைவி டயானாவும் பிரிந்திருந்தார்கள், அதேபோல, சார்லசின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது மனைவியும் பிரிந்தார்கள், அத்துடன், சார்லசின் சகோதரியான இளவரசி ஆனுக்கும் அப்போது தான் விவாகரத்து ஆனது.
அதைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளில் இளவரசி டயானா மரணமடைய, பிள்ளைகள் வில்லியமும் ஹரியும் சோகத்தில் ஆழ்ந்தார்கள்.
புற்றுநோய் கண்டறியப்பட்டது
இப்படி தொடர் சோகங்களைக் கடந்த நிலையில் அதனைக் குறிக்கும் வகையில்தான், இது ஒரு துரதிர்ஷ்டமான ஆண்டு என்று கூறியிருந்தார் எலிசபெத் மகாராணியார்.
அதைப் போலவே இந்த ஆண்டும் அரச குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, பதவியேற்று கொஞ்ச காலம் கூட ஆகவில்லை, அதற்குள் மன்னர் சார்லசுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது.
வருங்கால ராணி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இளவரசி டயானாவுக்கு இணையாக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற இளவரசி கேட்டுக்கும் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது.
மீண்டும் திரும்பியுள்ளதோ
ஏற்கனவே, இளவரசர் ஹரி குடும்பத்தை விட்டுப் பிரிந்து மனக்கஷ்டங்களை ஏற்படுத்தியதை மறக்கமுடியாது இருக்கும் நிலையில், சிறுமிகளையும், இளம்பெண்களையும் சீரழித்த ஒரு நபருடன் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு இருந்த தொடர்பு குறித்த செய்திகள் வெளியாகி ராஜ குடும்பத்துக்கு தலைகுனிவைக் கொண்டுவந்தன.
இப்போது, மன்னரும் கேட்டும் ஓய்வெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட, வில்லியம் மனைவியைப் பார்த்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்நிலையில் மன்னருடைய சகோதரி ஆனும், யாரை பிரித்தானியா அதிகம் வெறுத்ததோ அதே கமீலாவும் இப்போது ராஜ குடும்பத்தின் முகங்களாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே, மகாராணி எலிசபெத் கூறிய ’annus horribilis’ மீண்டும் திரும்பியுள்ளதோ என்ற கேள்வி ஊடகவியலாளர்களாலும், ராஜ குடும்ப நிபுணர்களாலும் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |