சிறிலங்காவில் உற்றுநோக்கலை ஏற்படுத்திய பௌத்த துறவி
இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் பௌத்த தேரர்கள் தடையாக இருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சமூக வலைத்தளத்தில் நிழற்படமொன்றை பகிர்ந்துள்ளமை உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ஏனைய மதத் தலைவர்களை விட பௌத்த மதகுரு உயர்ந்தவர் என்ற தொனியில் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றமை குறித்து மனோ கணேசன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பதிவர் விமர்சனம்
தேசிய கீதம் பாடப்பட்ட போது, பௌத்த பிக்கு எழுந்து நிற்காத அதேவேளை, ஏனைய அனைத்து மதத் தலைவர்களும் எழுந்து நிற்கும் நிழற்படத்தை பகிர்ந்து மனோ கணேசன் கடுமையான விமர்சனப் பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு பின்னூட்டம் வழங்கியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், பௌத்த பிக்கு மதம் பிடித்தவர் என்ற அர்த்தப்பட பதிவிட்டுள்ளார்.
பௌத்த பிக்குவை போன்று ஏனைய மதத் தலைவர்களும் நடத்தப்பட வேண்டும் என மனோ கணேசனின் பதிவிற்கு பின்னூட்டம் வழங்கியவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேசிய கீதமோ, அரசாங்கமோ, சட்டமோ ஏன் அதிபர் ஆனாலும் பௌத்த பிக்குகளுக்கு கீழ்படிந்தே செயற்பட வேண்டும் போன்ற நியதி காணப்படுவதாகவும் அவர்களே கடவுள்கள் என்ற அகம்பாவமும் ஆணவமும் ஊறிப் போயுள்ளது எனவும் மற்றுமொரு பதிவர் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
இலங்கையில் சமத்துவமின்மையை குறித்த நிழற்படம் எடுத்துக்காட்டுகின்றது என மனோ கணேசனின் பதிவிற்கு பின்னூட்டம் வழங்கிய பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
