தலவாக்கலை பிரதான வீதியில் அரச பேருந்துகளின் அசமந்தம் : மக்கள் விசனம்
நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் பேருந்துகள் உரிய நேரத்துக்கு சேவையில் ஈடுபடுத்தப்படாததால் பாடசாலை மாணவர்களும் தொழிலுக்குச் செல்வோரும் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பேருந்து சேவையில் தாமத நிலை ஏற்படுவதால் காலை வேளைகளில் பேருந்துகளில் சன நெரிசல் அதிகமாகி, பாடசாலை மாணவர்கள் மிதிபலகையில் நின்றுகொண்டும் தொங்கியபடியும் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.
அவ்வீதியில் தினமும் சேவையில் இயங்கவேண்டிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் சாரதியோ அல்லது நடத்துநரோ விடுமுறை எடுத்துச் சென்றால், அவர்கள் பணிபுரியும் பேருந்துகளும் சேவையில் ஈடுபடுத்தப்படாமல் திடீரென முற்றாக நிறுத்தப்பட்டுவிடுகின்றன.
அதுமட்டுமன்றி, திருத்த வேலைகள் காரணமாகவும் சில பேருந்துகள் இயங்குவதில்லை என்றும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தினமும் பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், அன்றாடம் தொழிலுக்குச் செல்வோர் சீரான பஸ் போக்குவரத்து இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக கிலாரண்டன், டெஸ்போட், கிரிமிட்டி, வாழைமலை, அவோக்கா, கார்லிபேக் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களே போக்குவரத்துச் சிக்கலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இந்த பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளமையால் காலை 6.30 மணிக்கு தலவாக்கலையில் இருந்து நுவரெலியா நோக்கி புறப்பட்டு, காலை 7.20 மணியளவில் டெஸ்போட், கிரிமிட்டி வழியாகச் செல்லும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி காணப்படுவதாகவும், அந்த பேருந்தில் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்தோடு இ.போ.ச பேருந்துக்கான மாதாந்த பருவச்சீட்டு பெற்றுக்கொண்டவர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் வேறு வாகனங்களில் தனியாக பணத்தை செலவழித்துச் செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அவ்வீதியில் காலையில் உரிய நேரத்துக்கு அரச பஸ்கள் சேவையில் ஈடுபடாத காரணத்தால் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக பெற்றோர் கவலையோடு தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலருக்கு தொடர்ச்சியாக தெரியப்படுத்தியும் ஊடகங்களில் பல முறை சுட்டிக்காட்டப்பட்டும் இதுவரை இந்த பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது எனவும் பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
எனவே, இப்பிரதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு பாடசாலை நேரங்களில் சீரான பேருந்து சேவையை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |