இலங்கையில் நிலைகொண்டுள்ள ஊழல் - மூலோபாய ஒத்துழைப்புடன் ஓர் புதிய முயற்சி
“Business Against Corruption” எனும் புதிய முயற்சியினை இலங்கை பணிப்பாளர்கள் அமைப்பு (SLID) மற்றும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறி லங்கா (TISL) நிறுவனம் ஆகியன கூட்டாக இணைந்து ஆரம்பித்து வைக்கிறது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஊழலே அடிப்படை காரணம் என பல ஆய்வாளர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது வர்த்தக, பொது மற்றும் அரச மட்டங்களில் காணப்படுகிறது.
நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் நிலைத்திருக்கக்கூடிய தன்மை என்பவற்றை உறுதி செய்யும் நோக்கில் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஊழல் செயற்பாடுகளானது முதலீட்டுக்கு ஆபத்தை உருவாக்கும் அதேவேளை, முதலீட்டுக்கான ஆர்வத்தையும் வலுவிழக்கச் செய்கிறது.
மேலும் தவறான வள ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தல், நிச்சயமற்ற தன்மையினை உருவாக்குதல் மற்றும் அதிக சமூக செலவுகளையும் ஏற்படுத்துகிறது.
ஊழல் செயற்பாடுகளை குறைத்தல் அல்லது தடுத்தல் என்பது இலங்கையினை நீண்ட கால முதலீட்டுக்கான சிறந்த மற்றும் கவர்ச்சிகரமான முதலீட்டு மையமாக மாற்றியமைக்கும்.
இலங்கையானது 102 ஆவது இடத்தில்
இலங்கையில் பல வருடகாலமாக ஊழலானது நிலைகொண்டுள்ள நிலையில் அது தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. உலகளாவிய அமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தின் மிக சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியின் (2021 ஆம் ஆண்டின்) அடிப்படையில் இலங்கையானது 102 ஆவது இடத்தில் காணப்படுகிறது.
இந்த மதிப்பாய்வுச் சுட்டியானது உலகெங்கிலுமுள்ள 180 நாடுகள் மற்றும் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெறுகின்ற பொதுத் துறை சார்ந்த ஊழல்களின் அடிப்படையில் தர வரிசைப்படுத்தப்படுகின்றது.
ஆட்சியை வலுப்படுத்தவும் ஊழல் செயற்பாடுகளை குறைக்கவும் முயற்சிகள் தொடரப்பட வேண்டும் என குறித்த மதிப்பாய்வு அறிக்கையின் பிரிவு IV பரிந்துரைக்கிறது.
ஊழலைத் தடுப்பதற்கும் அவற்றை எதிர்ப்பதற்கும் வணிகத்துறைக்கு (corporates) வலுவான சட்ட ஏற்பாடுகள் காணப்படாத நிலையில், வணிக துறைசார் நிறுவனங்கள் அவர்களது நேர்மைத்தன்மை மற்றும் நெறிமுறைகளை முறையாக நிலைநிறுத்த தேவையான சர்வதேச ரீதியிலான நடைமுறைகள் மற்றும் மாற்று தன்னார்வு வழிமுறைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது கட்டாயமாகும்.
நிறுவனங்களின் பரிவர்த்தனை மற்றும் மூலோபாய திட்டமிடல் மட்டங்களில் ஊழலுக்கு எதிராக அவர்களது உள்ளக வினைத்திறனை வலுப்படுத்தக்கூடிய கூட்டு வணிக நடவடிக்கைகளின் பங்காளர்களாக, ஊழலை ஒழிப்பதற்கு அவசியமான நாட்டின் தேவைக்கு பதிலளிக்கும் வகையில் வணிக நிறுவனங்கள் முன்னோக்கி செல்ல வேண்டிய நேரம் இதுவென இலங்கை பணிப்பாளர்கள் அமைப்பு (SLID) நம்புகிறது.
நாம் தற்போது எதிர்கொள்வது போலான நெருக்கடியானது நாட்டு மக்களையும் அவர்களுடன் தொடர்புடைய முறைமையினையும் சிதைக்கக்கூடியதாகும். நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் நாம், குறுகிய கால நலன்களுக்கு அப்பால் நீண்ட கால அடிப்படையில் நாட்டின் நலன் மற்றும் சிறந்ததை ஆரம்பிக்க வேண்டும்.
நமது நாட்டின் இந்த திருப்புமுனையில், பொருத்தமான நீண்ட காலக் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்வது இன்றியமையாததாகும்.
Business Against Corruption
Business Against Corruption என்ற கருப்பொருளின் கீழ் மூலோபாய ஒத்துழைப்புடன் ஒரு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தும் நோக்குடன் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறி லங்கா (TISL) நிறுவனத்துடன் SLID அமைப்பானது அண்மையில் இணைந்து கொண்டது.
இந்த கருப்பொருளின் கீழ், நிறுவன மட்டத்தில் வெளிப்படக்கூடிய ஊழல் அபாயங்களை குறைக்கும் நோக்குடன் வணிகங்களுக்கு தேவையான செயற்பாடுகளை எளிதாக்கவும் அவற்றை செயற்படுத்துவதற்கும் குறித்த இரு நிறுவனங்களும் இணைந்து செயற்படவுள்ளது.
எதிர்வரும் மூன்று ஆண்டு காலப்பகுதிக்குள், வணிக நிறுவனங்களின் வலுவான உள்ளக வினைத்திறனான கட்டமைப்பை உருவாக்கி நெறிமுறைசார் வணிக நடவடிக்கைகள், நியாயமான சந்தைப் போட்டி, நியாயமான விலையிடல், நம்பத்தகுந்த தலைமைத்துவம் போன்றவற்றை வணிகங்களுக்கு இடையே ஊக்குவித்து அதனூடாக அவர்களின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மைத்தன்மை ஆகியவை தொடர்பிலான சிறந்த புரிந்துணர்வை உருவாக்க முயல்கிறது.
இவை தொடர் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளான, முக்கிய பங்குதாரர்களை கலந்துரையாடல்களில் ஈடுபடுத்தல், குறித்த விடயம் தொடர்பான சிறந்த நடைமுறைத் திட்டங்களை உள்ளடக்கிய பயிற்சிப் பட்டறைகள் நடாத்துதல் போன்றவற்றினூடாக குறித்த பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வை வணிக நிறுவனங்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்குடன் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது” - என்றுள்ளது.

