அஸ்வெசும நன்மை பெறும் குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் திட்டதின் கீழ் நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (11) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நலன்புரி நன்மைகளைச் செலுத்தும் உத்தேச முறையொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காக 2023.04.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
25 மாவட்டங்களையும் உள்ளடக்கி
அதற்கமைய, அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் உத்தேசத் திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்கள் 03 வருடங்களில் பொருளாதார, சமூக மற்றும் உளரீதியாக வலுவூட்டும் நோக்கில் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் 16,000 பயனாளிக் குடும்பங்களை இலக்காகக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி நிதியனுசரணை மற்றும் உள்நாட்டு நிதிவசதி மூலம் முன்னோடிக் கருத்திட்டத்தை ஆரம்பிக்கப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனை
அத்துடன் குறித்த முன்னோடிக் கருத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்துப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும் அடையாளங்காணப்பட்ட பயனாளிக் குடும்பங்களை வலுவூட்டுவதற்காக குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக அதிபர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |