சிக்குவாரா நாமல்.! இறுதி கட்டத்தை நெருங்கும் வழக்கு
வழக்கு ஒன்றுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (13 )அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது சட்டவிரோதமாக சம்பாதித்த ரூ.15 மில்லியனை, NR Consultancy என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ததன் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, நிறுவனத்தின் இயக்குநர்களாகப் பணியாற்றிய நித்ய சேனானி சமரநாயக்க, சுஜானி போகல்லாகம மற்றும் சுதர்ஷன கணேகொட ஆகியோருக்கு எதிராக, முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விசாரணை
இந்த நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோது, சந்தேக நபரான நாமல் மற்றும் பலர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
அதன்போது, முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் முடிந்துவிட்டதாகவும், வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
இதன்படி, வழக்கை ஓகஸ்ட் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)