தமிழர் தாயகங்களில் நினைவேந்தப்பட்ட மாவீரர் தினங்கள்! நீதிமன்றில் கூறப்பட்ட விடயம்
தமிழர் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக இதுவரை கொண்டாடப்பட்ட மாவீரர்களின் “நினைவு தினங்கள்” தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
மாவீரர் நினைவு தின நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி ஆனந்த ஜயமானவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மாவீரர்களின் நினைவு தினம்
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி உண்மைகளை முன்வைத்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த நவம்பரில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நீதிமன்றில் தெரிவித்தார்.
இதன்படி, குறித்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் இவ்வாறான உறுதிமொழியை வழங்குவதால், இந்த மனுவை தொடர வேண்டிய அவசியமில்லை என மனுதாரரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
வழக்கு விசாரணை
இதற்கமைய மனுவை மீள பெற அனுமதிக்க வேண்டும் என மனுதாரரின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அப்போது, நீதிமன்றத்தில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமிந்த விக்ரம, இதுவரையில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முழுமையான அறிக்கையை நீதிமன்றில் முன்வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, உரிய விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |