2005 இற்கு பின்னரான ஆட்சியை எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டனர் - சந்திரிக்கா பரபரப்பு குற்றச்சாட்டு
நெருக்கடிக்கு ராஜபக்சாக்களே காரணம்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடிக்கு ராஜபக்சாக்களே காரணமென முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கடும் குற்றச்சாட்டை முன்வைததுள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு ராஜபக்சாக்கள் மாத்திரமல்ல, அவர்களைச் சுற்றியுள்ள அரசாங்கப் பிரதிநிதிகள், அவர்களது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளும்தான் காரணம் என்றும் அவர் கூறினார்.
“2005க்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்தவர்கள், நாடும் அதன் சொத்துக்களும் தமக்குச் சொந்தம் என்றும், தாங்கள் எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்றும் நினைத்தனர்.
எதிர்த்தால் கொலை
தாங்கள் செய்யும் ஒவ்வொரு அழுக்கு வேலையிலிருந்தும் தப்பித்து விடலாம் என்று நினைத்தார்கள்.அவர்களது ஆட்சிக்கு எதிராக யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் அவர்கள் கொல்லப்பட்டனர், ”என்று அவர் கூறினார்.
தேசத்தின் நலனுக்காக உழைக்க விரும்புபவர்கள் கட்சி பேதமின்றி கைகோர்த்து தேசத்தை புத்துயிர் பெற புதிய முறைமையை அறிமுகப்படுத்துவதே முன்னோடியாக இருக்கும் என முன்னாள் அதிபர் மேலும் தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் நவ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அலுவலகத்தை இன்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைக் குறிப்பிட்டார்.
நவ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடு நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

