உதவிக்கு பதில் உளவுக் கப்பலை அனுப்பிய சீனா - நாடாளுமன்றில் பகிரங்கமாகத் தெரிவித்த தமிழ் எம்.பி!
இந்தியா எமக்கு உதவிக் கப்பல்களை அனுப்பும் அதேவேளை, சீனா உளவுக் கப்பலை அனுப்புகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெற்று வரும் இடைக்கால வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“நாடாளுமன்றில் செங்கோலை எடுத்து வரும்போது எழுந்து நிற்காத பௌத்த தேரர் ஒருவர், சீனாவின் உளவு கப்பல் வந்தபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா மாத்திரமே உதவிக் கரம் நீட்டியது
“மேலும் நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவிய போது அயல் நாடான இந்தியா மாத்திரமே எங்களுக்கு உதவியது. ஆனால் சிறிலங்காவிற்கு வழங்கிய கடனை கூட மறுசீரமைக்க முடியாது என சீனா கூறுவதோடு, நாட்டுக்கு உளவுக் கப்பலையும் அனுப்புகிறது.
கடந்த பொருளாதார நெருக்கடியிலே இந்தியா 4 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. குறைந்த வட்டியில் 800 மில்லியன் உணவுக்காவும், மருந்துக்காகவும், அத்தியாவசிய தேவைகளுக்கும் வழங்கியுள்ளது.
சீன கப்பலுக்கு மரியாதை செலுத்திய தேரர்
கடன் அடிப்படையில் 700 மில்லியன், எரிபொருளுக்கு வழங்கியிருக்கிறது. விவசாய உரத்திற்கு 55 மில்லியன் உதவி செய்திருக்கிறது. மீனவர்களுக்கு மண்ணெண்ணெய், அதற்கு மேலாக தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக உணவு பால்மா மருந்துப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
இவ்வாறு இந்தியா இந்த காலகட்டங்களிலே எங்களுக்கு உதவிக் கப்பல்களை அனுப்புகிறது. ஆனால் ஒரு விடயத்தை மிகவும் வேதனையுடன் கூறிக்கொள்ள விளைகின்றேன். இந்த நாடாளுமன்றத்தில் செங்கோல் வரும் போது எழுந்து நிற்காத தேரர், சீனாவில் இருந்து உளவுக் கப்பல் வரும் போது அதற்குரிய மரியாதையை கொடுத்து எழுந்து நிற்கிறார்” எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

