சீன உளவுக் கப்பல்! இந்தியாவுடன் இணையும் மாலைதீவு
சீனாவின் உளவு கப்பல் என சந்தேகிக்கப்படும் Xiang Yang Hong-03 கப்பலானது மாலைதீவிற்கு சென்றடைந்த நிலையில் இந்தியாவானது இலங்கை மற்றும் மாலைதீவுடன் கூட்டு இராணுவ பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
சீனக் கப்பல் Xiang Yang Hong-03 வியாழன் மதியம் மாலே துறைமுகத்தை வந்தடைந்ததாக கப்பல்களைக் கண்காணிக்கும் Editon இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் மாலத்தீவில் நங்கூரமிடுவதற்கு அரசாங்கம் ஜனவரி 23 அன்று அனுமதி வழங்கியது. இந்த ஆராய்ச்சிக் கப்பல் கடல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டதாக சீனா கூறினாலும், இது உளவுக் கப்பலாக இருக்கலாம் என்பதால் அண்டை நாடுகள் கண்காணித்து வருகின்றன.
கூட்டுப் பயிற்சி
இந்தநிலையில், மாலத்தீவு கடலோர காவல்படை, இந்திய மற்றும் இலங்கை கடற்படைகள் இணைந்து ‘தோஸ்தி-16’ (DOSTI-16) என்ற பெயரில் கூட்டுப் பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கியுள்ளன.
நாடுகளுக்கிடையில் பரஸ்பர இராணுவ திறனை மேம்படுத்தவும், ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் இது பிப்ரவரி 25 வரை தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பலின் நகர்வு குறித்து இந்தியா ஏற்கனவே கவலை தெரிவித்திருந்ததுடன், கொழும்பு துறைமுகத்தில் கப்பல் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |