யாழ்.பாடசாலையொன்றில் மாணவிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரியின் செயற்பாடு
யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், பெண்களின் சுகாதார துவாய்க்கு விளம்பரம் செய்யும் நோக்கில் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகரால் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்து கொடுத்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த உதவி காவல்துறை அத்தியட்சகர், மாணவர்களுக்கான கருத்தரங்கு என கூறி கடந்த 15 ஆம் திகதி மருதனார்மடத்தில் உள்ள பிரபல பாடசாலையில் பெண் மாணவர்களை ஒழுங்குபடுத்துமாறு கூறியிருந்தார்.
இந்நிலையில் அந்த நிகழ்வுக்கு செல்லுமாறு சுன்னாகம் காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கும் அறிவித்திருந்தார்.
அந்தவகையில் சுன்னாகம் காவல்நிலைய பொறுப்பதிகாரி, தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் ஆகியோர் அந்த நிகழ்வுக்கு சென்றிருந்தனர்.
அங்கே கிறிஸ்தவ மதகுரு என்றொருவர் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஆண் ஒருவர் வந்து நிகழ்வை ஆரம்பித்தார்.
இதன்போது தனியார் நிறுவனம் ஒன்றின் தயாரிப்பிலான சுகாதார துவாயை காண்பித்து அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தை அந்த மதகுரு வழங்கினார்.
ஆணொருவர் இவ்வாறு விளக்கம் கூறுவதால் அங்கிருந்த பெண் பிள்ளைகள் சங்கடத்துக்குள்ளாகினர். இதனை பார்த்து சங்கடத்துக்குள்ளான சுன்னாகம் காவல்நிலைய பொறுப்பதிகாரியும், காவல்துறை உத்தியோகத்தரும் அங்கிருந்து வெளியேறினர்.
பின்னர் அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பெண் பிள்ளைகள் அனைவருக்கும் ஒவ்வொரு பொதி வழங்கப்பட்டது.அதில் சுகாதார துவாயும், பெண் பிள்ளைகளின் உள்ளாடையும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மாணவர்களுக்கான கருத்தரங்கு என பொய் கூறி யாழ்ப்பாணம் மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகரே இவ்வாறு தனியார் உற்பத்திகளுக்கு பாடசாலையில் விளம்பரத்துக்கான களம் அமைத்துக் கொடுத்தமையும், ஆணொருவர் பெண் பிள்ளைகளின் அந்தரங்க விடயம் தொடர்பாக விளக்கமளித்தமையும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
