சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி சர்ச்சை : தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு நீதிமன்றத்தின் ஊடாக சட்டரீதியான தீர்வைப் பெற்றுக்கொள்வதே பொருத்தமானது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பரவி வரும் சில தகவல்கள் குறித்து விளக்கமளித்து, தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்காக, அக்கட்சியின் தலைவர் சட்டத்தரணி நிமல் சிறிபால டி சில்வா, தற்போதைய செயலாளராகப் பணியாற்றும் துமிந்த திசாநாயக்க, பொருளாளர் லசந்த அழகியவண்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர ஆகியோர் கடந்த நவம்பர் 6ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.
தேர்தல்கள் ஆணைக்குழு
இதன்போது, நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் தொடர்பில் இரு தரப்பினரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, குறித்த சர்ச்சையை நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்த்துக்கொள்வதே பொருத்தமானது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியல்ல என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் அந்த ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகத் தொடர்ந்தும் காணப்படுவதாகவும், தற்போதைய பிரச்சினை அக்கட்சியின் செயலாளர் பதவிக்கு மாத்திரமே உரித்தானது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
தயாசிறி ஜயசேகரவின் கருத்து
இதேவேளை, இது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் நேற்று (13) விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தேர்தல்கள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர், தயாசிறி ஜயசேகர ஊடகங்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படும் சில கருத்துக்கள் தவறானவை.

குறித்த கருத்துக்கள் கட்சி உறுப்பினர்களையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்தக்கூடும் என்பதால், சரியான தகவல்களைப் பகிரங்கப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், செயலாளர் பதவி தொடர்பில் தற்போது மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கின் தீர்ப்புக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதே பொருத்தமானது என தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |