ரணிலுடன் லண்டன் தமிழ் புத்திஜீவிகள் டீல்
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தந்திரோபாய அரசியல் தற்போது லண்டனிலும் எதிரொலிக்கின்றது.
கொழும்பிலிருந்து லண்டனுக்கு சென்றவுடன் தனது நேரத்தை விரயமாக்காத ரணில் விக்ரமசிங்க, இரவு விருந்தொன்றுடன் லண்டனில் தமிழ் புத்திஜீவிகள் என தம்மை அடையாளப்படுத்தும் சில முகங்களுடன் பேச்சுக்களை நடத்தி இருக்கின்றார்.
யார் இந்த தமிழ் முகங்கள்
இந்தச் சந்திப்பில் பங்கெடுத்த தமிழ் முகங்களின் பெயர் விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை. ஆயினும் சந்திப்பு இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கும் தமிழ் முகங்களும் இந்தச் சந்திப்பில் இருந்ததாக தெரிய வருகிறது.
இந்தச் சந்திப்பின்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தான் அக்கறையாக இருப்பதாகவும், தமிழ் கட்சிகளுடனான சந்திப்பு எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாகவும் ரணில் கூறி இருக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்கவை பொறுத்தவரை அவர் தனது லண்டன் மற்றும் டெல்லி பயணத்தை இலக்கு வைத்தே தனது மே தின உரையில் இனப்பிரச்சினை தீர்வு குறித்த பேசுபொருளை வலிந்து எடுத்து விட்டமை தெரிந்த விடயம்.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம்
ரணில் தனது லண்டன் பயணத்தின் போது நிச்சயமாக தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தான் அக்கறையாக செயற்படுவதாக காட்டிக்கொள்வார் எனக் கூறப்பட்ட நிலையில், லண்டனில் ரணில் கடந்த வியாழனன்று(4) இரவு அதனை அச்சொட்டாக செய்திருக்கின்றார்.
இதேபோல, நேற்றுமுன்தினம்(5) ரணில் பங்கெடுத்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்திலும் தான் இலங்கை தீவை மீட்டெடுக்க கடுமையாக பாடுபடுவதால் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கை வளையத்தையும் சில நாடுகளின் தலைமைத்துவங்களுக்கு விடுத்திருக்கின்றார்.
