மன்னார் நீதிபதிக்கு எதிரான அவதூறு சுவரொட்டி: CIDக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த எம்.எம்.எம். மிஹால்-க்கு(தற்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி) பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அவதூறு சுவரொட்டி ஒன்றை அச்சிட்டு காட்சிப்படுத்தியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான நடவடிக்கை குறித்து நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி இந்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்வரும் பெப்ரவரி 05ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர், கொழும்பு குற்றப்பிரிவினர் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனை
இந்த வழக்கில் மாத்தளையைச் சேர்ந்த இஷான் குணசேகர, அரவ்வலையைச் சேர்ந்த கிரிஷான் நாலக, மடபாத்தையைச் சேர்ந்த மனோஜ் மதுசங்க, பட்டதாரியான லக்மால் விக்ரமசிங்க, எஸ்.பி.எச்.எம். மதுசங்க, கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர் திலங்க தக்ஷித சுமதிபால, அச்சக உரிமையாளர் தசுன் தரங்க பண்டார மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

முறைப்பாட்டாளர் தரப்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சந்தேகநபர்களின் கையடக்கத் தொலைபேசிகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியின் கடவுச்சொல்லை திறப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அந்த சந்தேகநபரை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட வேண்டும் எனவும் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்காக விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றப்பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைத்த பின்னர், வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |