அளம்பில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை விடுவிக்க கோரிக்கை! இல்லையேல் சாகும்வரை உணவுத்தவிர்ப்பு போராட்டம்
அளம்பில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள மூன்று பெற்றோர்கள், இது தொடர்பாக அரசியல் தலைமைகள், அதிகாரிகள் மிக விரைவில் தமக்கான உரிய தீர்வை பெற்றுத்தருமாறு கோரியுள்ளனர்.
தவறும் பட்சத்தில் தாம் சாகும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மூன்று பெற்றோர்கள் அறிவித்துள்ளனர்.
சாகும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டம்
தமது உறவுகளை அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் விதைத்த தந்தை ஒருவரும், இரண்டு தாய்மார்களும் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணிக்கு அருகில் இருக்கின்ற 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினர் தமது பிள்ளைகளின் உடலங்கள் விதைக்கப்பட்ட இடத்தில் விவசாய செய்கையில் ஈடுபடுவதோடு கிரிக்கெட் விளையாடுவதும், உணவகம் நடத்துவதுமாக உள்ளனர்.
இவர்களை குறித்த காணியை விட்டு வெளியேற்றி தமது பிள்ளைகளை நின்மதியாக அஞ்சலிக்க ஏற்பாடு செய்து தருமாறு குறித்த பெற்றோர் கோரியுள்ளனர்.
“இவர்கள் தமது உறவுகளை அஞ்சலிக்க வழியில்லாமல் பல்வேறு மன அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் இது தொடர்பாக அனைத்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச அதிகாரிகள் இணைந்து தமது பிள்ளைகளை அஞ்சலிக்க குறித்த காணியை இராணுவத்திடம் இருந்து மீட்டு தருமாறும் தவறும் பட்சத்தில் குறித்த காணியை மீட்க சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு குறித்த காணியை மீட்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
