தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோருவது நியாயமற்ற கோரிக்கை - மகிந்த!
"யாழ்ப்பாணம் தையிட்டியில் உள்ள திஸ்ஸ விகாரையானது உரிய அனுமதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது, ஆகவே அதனை அகற்றக் கோருவது நியாயமான செயல் இல்லை."
இவ்வாறு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள தொடர் போராட்டம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதில் வாங்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நியாயமற்ற கோரிக்கை
தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
"எல்லா விடத்திற்கும் இனவாத மற்றும் மதவாதக் கருத்துக்களைக் கூறுவதை தமிழ்க் கட்சிகள் உடன் நிறுத்த வேண்டும்.
அமைதியான முறையில் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்லும் தமிழ் மக்களை போராட்டம் என்ற போர்வையில் அவர்களை வன்முறைக்கு கொண்டு செல்வதுதான் தமிழ்க் கட்சிகளின் நோக்கமாக இருக்கின்றது.
தமிழ் அரசியல்வாதிகள் தமது அரசியல் நகர்வுகளுக்காக தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்குகின்றனர்.
இதனை, தமிழ் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். யாழ்ப்பாணம் தையிட்டியில் உள்ள திஸ்ஸ விகாரை உரிய அனுமதிகளைப் பெற்று அமைக்கப்பட்டது.
அதனை, அகற்றக் கோருவது நியாயமற்ற விடயமாகும்." என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
