தமிழர்களை அடக்க முயலும் சிங்கள அரசு! போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள்
தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்புப் போராட்டமானது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று(19) நண்பகல் 12 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் மீதான அரச அடக்குமுறை
இதன்போது, "சிங்கள பௌத்தமயமாக்கலை உடன் நிறுத்து", "குருந்தூர்மலை எங்கள் சொத்து", "வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து", "மண் துறந்த புத்தருக்கு எங்கள் மண் மீது ஆசையா?" "சர்வதேசமே காசாவும் இலங்கையும் வேறு வேறா?", "பண்பாட்டு படுகொலையை உடன் நிறுத்து", "திட்டமிட்ட கைதுகளை உடன் நிறுத்து" போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர் சங்கத்தினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில்,வவுனியா வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினத்தில் கைது செய்யப்பட்ட 07 சிவபத்தர்களையும் ஆலய பூசாரியையும் விடுதலை செய்யுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |