டயானா கமகே தாக்கப்பட்டமை விவகாரம்: சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்ட அறிக்கை
சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் பெரேரா ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சபாநாயகரிடம் கையளித்துள்ளது.
இன்று கடைசியாக கூடிய குறித்த குழு அதன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்ததாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வளாகத்தினுள் வாக்குவாதம்
சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ரோஹன பண்டார மற்றும் சுஜித் பெரேரா ஆகியோருக்கு இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தினுள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நாடாளுமன்ற வளாகத்தில் தன்னை தாக்கியதாகக் குற்றம் சுமத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவுக்கு எதிராக வெலிக்கடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதனை தொடர்ந்து, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் மற்றும் ஜயந்த கருணாதிலக ஆகிய உறுப்பினர்களை உள்ளடக்கி குறித்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
