கண்டனத்துக்குள்ளாகிவரும் காண்டீபனின் பேச்சு!
வடக்கு கிழக்கில் முன்னாள் போராளிகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிர்கள் பற்றிய உண்மை நிலவரங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று கருத்து வெளியிட்டுள்ள த.தே.ம.முன்னணியின் நிலைப்பாடு கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றது.
அண்மையில் புலம்பெயர் ஊடகம் ஒன்று நடாத்தியிருந்த இணையவழி கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசிய த.தே.ம.முன்னணியின் ஊடகப்பேச்சாளர், வன்னியில் வலிகளுடனும், வேதனைகளுடனும் வாழ்ந்துவருகின்ற முன்னாள் போராளிகளின் அவலங்களை ஊடகங்கள் புலம்பெயர் மக்களிடம் கொண்டுசென்று, புலம்பெயர் மக்களிடம் இருந்து நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள் உதவிகள் பெறும் செயற்பாட்டை கடுமையாகக் கண்டித்திருந்தார்.
அத்தோடு புலம்பெயர் மக்கள் நேரடியாக வன்னி சென்று அந்த மக்கள் மீது காண்பித்துவருகின்ற அக்கறையையும், அவர்கள் புரிந்துவருகின்ற உதவிகளையும் கொச்சைப்படுத்துவது போன்று பேசியும் இருந்தார்.
த.தே.ம.முன்னணியின் பேச்சாளர் காண்டீபனின் அந்தப் பேச்சு புலம்பெயர் மக்களால் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றது.
'முன்னாள் போராளிகளுக்கு உதவுகின்றோம் பேர்வழிகள் என்று சில புலம்பெயர் அமைப்புக்கள் கடந்த 13 வருடங்களாக லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதிவசூல் செய்துவந்தும், அந்த நிதி பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லை. இந்த உண்மையை உள்ளூர் ஊடகங்கள் அப்பட்டமாக வெளிக்காண்பித்துவருவதலாலேயே, காண்டீபன் போன்றோர் அந்த ஊடகங்களின் வாயை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக' புலம்பெயர் செயற்பாட்டாளர் ஒருவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
'வடக்கு கிழக்கு மக்களின் உண்மை நிலையை உலகிற்கு எடுத்துக்கூறுவது தமிழ் ஊடகங்களின் கடமை. அந்தக் கடமையைத் தடுக்கின்ற காண்டீபனின் செயல் கண்டிக்கத்தக்கது' என்று புலம்பெயர் அமைப்பு ஒன்றின் பொறுப்பாளர் கருத்து வெளியிட்டிருந்தார்.
'கடவுளுக்கும் பக்தர்களுக்கும் இடையே புரோக்கர் வேலை பார்க்கும் பூசாரிகள் போன்று, இலங்கை வாழ் மக்களுக்கும் புலம்பெயர் உறவுகளுக்கும் இடையில் பிளவுகளை நிரந்தரமாக ஏற்படுத்திவைத்து, தங்கள் ஊடாகத்தான் அனைத்தும் நடைபெறவேண்டும் என்று புரோக்கர் வேலை பார்க்கின்ற ஒரு இழிசெயல் அது' என்று கோபத்துடன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார் புலம்பெயர் தேசத்திலுள்ள ஒரு முன்னாள் போராளி.
'புலம்பெயர் மக்களுக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் இடையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு உறவுப்பாலமாகத் திகழவேண்டுமே தவிர, அவர்களைப் பிரித்து, பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடுகின்ற ஒரு தரப்பாக இருக்கக்கூடாது' என்று கூறுகின்றார்கள் புலம்பெயர் தமிழ் மக்கள்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.