இந்தியாவுடனான மோதல்! இலங்கைக்கு 09 ஒப்பந்தங்களால் செக் வைத்த சீனா
சிறிலங்காவின் பிரதமரால் இலங்கை மற்றும் சீனாவுகிடையில் கைச்சாத்தான 9 ஒப்பந்தங்கள் தொடர்பாக இந்தியா கவலை வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனா சென்ற பிரதமர் குணவர்தன தலைமையிலான உயர்மட்ட குழு அங்கு இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் 09 ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளன.
இந்த நிலையில் கொழும்பு சர்வதேச விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு பீஜிங் உதவிகளை வழங்க உறுதியளித்துள்ளததாக பிரதமர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்.
கடற்படை செயற்பாடுகள்
ஜப்பானின் நிதியுதவியுடன் கொழும்பு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் இலங்கை அதன் இறையாண்மைக் கடனைத் திருப்பிச் செலுத்தாததால் இந்தத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது, இவ்வாறான பின்புலத்திலே கொழும்பு சர்வதேச விமான நிலையத்தை சீனா அபிவிருத்தி செய்ய உள்ளதாகவும் பிரதமர் தினேஸ் அறிவித்துள்ளார்.
மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியதன் ஊடாக இந்து-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை செயற்பாடுகள் அதிகரிக்கலாம் என்று இந்தியாவும் அமெரிக்காவும் ஏற்கனவே கவலை கொண்டுள்ளன.
இந்நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் மேலும் செயற்பாடுகளை விரிவுபடுத்த சீனாவுக்கு இலங்கை வழங்கியுள்ள ஆதரவு மற்றும் கொழும்பு விமான நிலையத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
99 வருட குத்தகை
இலங்கையின் துறைமுகங்கள் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட மாட்டாது என்று சீனா வலியுறுத்தியுள்ளது, ஆனால், உளவு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டைக்கு வருவதை இந்திய அரசு கடுமையாக எதிர்த்தது.
இதனிடையே நேற்று (27) புதுடில்லிக்கு சென்றுள்ள சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிடம் இந்தியா கேள்வியெழுப்பும் என நம்பப்படுகிறது, இந்த சூழ்நிலையை சாகலவும் புதுடில்லிக்கு தெளிவுப்படுத்துவார் என வலுவாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகமானது கடந்த 2017 ஆம் ஆண்டு 99 வருட குத்தகையின் அடிப்படையில், 1.12 பில்லியன் டொலர்களுக்கு சீனாவுக்கு இலங்கையால் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |