திருகோணமலையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய கப்பல்! இலங்கை முன்னெடுக்கவுள்ள இராஜதந்திர நகர்வு
திருகோணமலை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளை சொந்த நாட்டுக்கு அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈரானிய அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இதன்படி இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு வழிகள் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ரவூப் ஹக்கீம் கேள்வி
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருக்கும் அந்த மூன்று ஈரானிய மாலுமிகளையும் மாற்ற அனுமதிக்குமாறு நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

முன்னதாக, ஈரானிய கப்பலான IRIS Bushehr கப்பலானது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவசர உதவி கோரியதைத் தொடர்ந்து, அதிலிருந்த 208 பேரை இலங்கை கடற்படை பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்திருந்தது.
அவர்களில் அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களும் அடங்கியிருந்தனர்.
கொழும்பு துறைமுகத்தில் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு காரணிகளை கருத்திற்கொண்டு, குறித்த கப்பலை திருகோணமலைக்கு மாற்ற இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
ஈரான் - அமெரிக்கா பதற்றம்
பின்னர் கப்பல் திருகோணமலை நோக்கி இழுவை மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இலங்கை தனது கடற்பரப்பை எந்தவொரு தரப்புக்கும் சாதகமாக பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என அரசாங்கம் முன்னதாக தெரிவித்திருந்தது.
இதன்படி மனிதாபிமான அடிப்படையிலும் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |