இருளில் மூழ்கிய இலங்கை : 600 கோடி ரூபாவிற்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு
தீடீர் மின்வெட்டு காரணமாக 600 கோடி ரூபாவிற்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய மின்சார அமைச்சர் மற்றும் செயலாளர் அதற்கு நட்டஈடு வழங்க வேண்டுமெனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம்(09) ஏற்பட்ட திடீர் மின்வெட்டு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, நாடு முழுவதும் மின்சாரம் தடைபடுவதை தடுக்கும் வகையில் வர்த்தமானி மூலம் வழங்கப்பட்ட உத்தரவுகளை மின்சார சபை மீறியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நட்டஈடு
2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி 2296/38 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக மின்சார அமைச்சுக்கும் இலங்கை மின்சார சபைக்கும் தாம் தலைவர் பதவியில் இருக்கும் போது மின்சாரம் தடைபடுவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், சுமார் 05 மணித்தியாலங்கள் நேற்று மின்வெட்டு காரணமாக 600 கோடி ரூபாவிற்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய மின்சார அமைச்சர் மற்றும் செயலாளர் நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |