நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள் : நீதியமைச்சரின் அறிவிப்பு
நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கைள் அல்லது அவர்கள் தொடர்பான முடிவுகளில் அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை, அதில் அரசாங்கம் தலையிடுவதும் இல்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், இத்தகைய விவகாரங்கள் அனைத்தும் சுதந்திரமான நீதிச் சேவை ஆணைக்குழுவின் (JSC) அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்று அமைச்சர் கூறினார்.
நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றம்
கம்பகா நீதவான் உட்பட சில நீதவான்களின் இடமாற்றங்கள் குறித்து எழுப்பப்பட்ட கவலைகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், நீதித்துறை அதிகாரிகள் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட கால நடைமுறைக்கு ஏற்ப அவ்வப்போது இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்று விளக்கினார்.

அரசாங்கம் இத்தகைய இடமாற்றங்களைச் செய்வதில்லை என்றும், இத்தகைய முடிவுகளை எடுப்பதற்கான ஆணைக்குழுவின் உள்நோக்கங்கள் அல்லது காரணங்கள் குறித்து அரசாங்கத்திற்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.
காவல்துறை மா அதிபர் சமர்ப்பித்த புகார்
சில நீதித்துறைத் தீர்ப்புகள் தொடர்பாக காவல்துறை மா அதிபர் (IGP) சமர்ப்பித்த புகார் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நாணயக்கார, இது குறித்து நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் எழுத்துபூர்வமான புகார் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த விவகாரம் சுதந்திரமாக ஆராயப்படும் என்று கூறிய அவர், இந்தச் செயல்பாட்டில், தானோ அல்லது அரசாங்கமோ தலையிடப் போவதில்லை என்பதையும், நீதித்துறை நடவடிக்கைகள் அல்லது தீர்ப்புகளின் தகுதிகள் குறித்து கருத்து தெரிவிக்கப் போவதில்லை என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |