தமிழ் மக்களின் சுமைதாங்கும் அமைச்சர் டக்ளஸ்: யாழ் பல்கலை துணைவேந்தர் புகழாரம்
ஆயுதப் போராட்ட காலங்களிலும் சரி ஜனநாயக வழிமுறையினூடாகவும் சரி தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்து வருகின்றார் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறீசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அமைச்சர் முன்னெடுக்கும் முயற்சிகள் தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயப்பனவாகவே இருந்து வந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார், தவிரவும், அமைச்சர் இளைஞராக இருந்த காலத்தில் அவரது செயற்பாடுகள் எவ்வாறானதாக இருந்ததென்பதை நினைவு கூர்ந்திருந்ததுடன் மேலும் கூறுகையில்,
மக்களின் வாழ்வாதாரம்
"இன்றுள்ள அரசியல்வாதிகளுள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேறுபட்டவராகவே இருக்கின்றார், அவர் மக்களுக்கான தேவைப்பாடை அறிந்து அவர்களது நலன்கள் அவர்களது எதிர்காலம் அவர்களது பொருளாதாரம் என்பன எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பதிலேயே அதிக கரிசனையானவராக இருக்கின்றார்.
அந்தவகையில் தமிழ் மக்கள் இவ்வாறான ஒருவரை மிகவும் நேசிப்பவர்களாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது தமிழ் மக்களின் கல்வித்தரம் மேலும் உயர்வடைவதற்கான பல்வேறு முயற்சிகளை குறிப்பாக எவ்வாறான தடைகள் இருந்தபோதிலும் அதன் உச்சிவரை சென்ற அவற்றை உடைத்து வெற்றிபெற்றுக் கொடுத்திருக்கின்றார்.
இதற்கு சான்றாக கிளிநொச்சி அறிவியல் நகரும் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடமும் விளங்குகின்றன, அதுமட்டுமல்லாது பின்தங்கிய கிராமங்களின் விளையாட்டுத்துறை கல்வி ஆகியவற்றில் மட்டுமல்லாது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களிலும் அதிக அக்கறை செலுத்தி வருவதை பார்க்க முடிகின்றது.
அரசியல் சாணக்கியம்
அதேவேளை, அமைச்சரின் அரசியல் சாணக்கியத்தினூடாக தொழில்வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளும் எமது மக்களுக்கு கிடைத்திருக்கின்றன. அதேபோன்று எதிர்காலத்திலும் எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு தகுதியானவராக இவர் காணப்படுகின்றார்." என்றார்.
இந்த யதார்த்தத்தினை புரிந்து யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தேசிய ஊழியர் சங்கத்தினர் மட்டுமல்லாது மக்களது முன்னெடுப்புக்களும் அமைந்தால் அனைத்து தேவைகளுக்குமான தீர்வுகளும் சிறப்பானதாக அமையும் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |