வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைக்கு இராணுவத்தினர் உடந்தையா!
சிறிலங்கா அரசு போதைப்பொருளை காரணம் காட்டி வடக்கில் இராணுவமயமாக்கலை விஸ்தரிக்க முயற்சிப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வடக்கில் இராணுவ சோதனைச்சாவடிகளை அதிகரிப்பதால் போதைப்பொருளை கட்டுப்படுத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை சிறிலங்கா இராணுவமும் காவல்துறையினரும் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புபட்டுள்ளார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிகரித்துள்ள போதைப்பொருள்
போதைப் பொருள் பாவனையும் அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் எனும் தலைப்பில் யாழ். பல்கலையில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. அதிலும் வடக்கில் கூடுதலான போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.
போதைப்பொருள் விடயத்தை அரசு கையாள்வதில் குறைபாடுகள் உள்ளன. இதனை சாட்டாக வைத்து இராணுவ மயமாக்கல் வடக்கில் அதிகரித்துள்ளது.
வடக்குக்கு நீதி அமைச்சர் அண்மையில் சென்றிருந்த போது, போதைப்பொருளை கட்டுப்படுத்துவோம் என்று கூறிவிட்டு சென்றார். அதனையடுத்து இரண்டு நாட்களின் பின்னர் இராணுவ சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இடம்பெறப் போகிறது என்றால், இராணுவத்துக்கு தகவல் முற்கூட்டியே கிடைக்கிறது. பின்னர் போராட்டக் காரர்களுக்கு அவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்.
சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தலாம்
இந்த நிலமை தான் வடக்கில் உள்ளது. ஆனால் போதைப்பொருள் எப்படி இங்கே வருகிறது என்று இராணுவத்துக்கு தெரியவில்லையா? போதைப்பொருள் பயன்பாட்டை சுகாதார பிரச்சினையாக பார்க்க வேண்டும்.
ஆனால் போதைப்பொருள் கட்டுப்பாடு, மற்றும் சிகிச்சை வழங்கும் செயற்பாட்டுக்கு இராணுவத்தையே அரசு பயன்படுத்துகிறது. சுகாதார அமைச்சு, மருத்துவ நிபுணர்கள் இந்த சிகிச்சை முறைகளை கையாள வேண்டும்.
நாட்டில் பல சட்டங்கள் உள்ளன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்களை குற்றவாளியாக பார்க்கும் சட்டம், அவர்களை சிறைக்கு அனுப்பும் சட்டம் ஆகியன உள்ளன. ஆனால் இவற்றின் மூலம் போதைப்பொருளைகட்டுப்படுத்த முடியாது.
அதே போன்று போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு நாம் உதவ முடியாது. ஆகவே மனித உரிமை மற்றும் சுகாதர அடிப்படையில் நோக்கினால் மட்டுமே இவர்களுக்கு நாம் உதவ முடியும்” எனவும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா
