துமிந்த திசாநாயக்கவுக்கு பிணை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை (Duminda Dissanayake) கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று (14) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பில், துமிந்த திசாநாயக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பயணத் தடை விதித்த நீதிமன்றம்
அதன்படி, இன்று (14) துமிந்த திசாநாயக்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 250,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அத்துடன் பிணை வழங்கும் இரண்டு நபர்களும் கொழும்புப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் சந்தேக நபரான துமிந்த திசாநாயக்கவுக்கு பயணத் தடை விதித்த நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது.
சந்தேக நபருக்கு பிணை வழங்குவதை சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் கடுமையாக எதிர்த்த போதிலும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை வழங்கும்போது, சந்தேக நபர் துப்பாக்கி வைத்திருந்தார் என்பது இன்னும் வெளிப்படுத்தப்படாததால், நீதிமன்றம் பிணை வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

