புதிய திட்டத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் அங்கீகாரம்
ஐரோப்பியநாடுகளில் இனி சகல செல்பேசிகளுக்கும் ஒரேவித மின்னேற்றி
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளிலும் செல்லிடப்பேசிகள் மற்றும் மடிக்கணனிகள் உட்பட்ட சிறியரக இலத்திரனியல் கருவிகள் எல்லாவற்றுக்கும் பொதுவாக ஒரே விதமான சார்ஜர் எனப்படும் ஒரு மின்னேற்றியை பயன்பாட்டுக்கு கொண்டுவர ஐரோப்பிய நாடாளுமன்றம் இன்று முடிவுசெய்துள்ளது.
இன்று நிறைவேற்றப்பட்ட இந்த முடிவை 27 நாடுகளும் ஏற்றுக்கொண்டால், 2024 ஆம் ஆண்டுமுதல் இந்த நடைமுறை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பிள் நிறுவனத்துக்கு பாதிப்பு
இந்தப் புதிய நடைமுறையால் தொலைத்தொடர்புக் கருவிகளில் தனித்துவமான மின்னேற்றியை கொண்ட அப்பிள் நிறுவனத்துக்கு பாதிப்பு வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தால் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய ஒன்றிய நுகர்வோர் 250 மில்லியன் யூரோக்களை சேமிக்கலாம் எனவும் மின்னணு சாதன கழிவுகளை குறைக்கலாம் எனவும் ஐரோப்பிய நாடாளுமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வருடாவருடம் பயன்படுத்தப்படாத மின்னேற்றிகளால் ஒன்றிய நாடுகளில் சுமார் 11,000 தொன் மின்னணு கழிவுகள் ஏற்படுவதாகவும் ஐரோப்பிய நாடாளுமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.


