ரணில் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம் - ஹிருணிகா வெளிப்படை
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணித் தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பிலான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இதற்கான சிறந்த உதாரணம் என ஹிருணிகா பிரேமச்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடை சட்டம்
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை தற்போது நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துமாறு காவல்துறையினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது எமக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.
முன்னாள் அதிபருக்கும் தற்போதைய அதிபருக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்பதை தற்போது மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
தற்போது இலங்கையில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாதிருந்தாலும் மக்கள் வீணாக போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள் என்ற விடயத்தை அரசாங்கம் மக்கள் மனதில் திணிக்க முயற்சிக்கிறது. இதற்காக அரசாங்கத்திற்கு விசுவாசமானவர்கள் வீதியில் இறங்கி குரல் கொடுக்கிறார்கள்.
அவ்வாறு குரல் கொடுப்பவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் காரணமாகவே அவர்களுக்கு தற்போது எரிபொருள், எரிவாயு போன்ற அனைத்தும் கிடைத்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் தமக்கு வேண்டிய விதத்தில் மக்களை வாழுமாறு வலியுறுத்துகிறது. காவல்துறையினர் மக்களுக்கு வேண்டிய பாதுகாப்பை வழங்காது மக்களை அடக்க முயற்சிக்கிறார்கள்.
இராஜாங்க அமைச்சர் பதவி
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதவி விலகியதன் பின்னர் அந்தப் பதவி எனக்கு கொடுக்கப்படுவதாக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் பொய்யானவை.
இராஜாங்க அமைச்சர் பதவியில் ஒருவர் இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக அந்தப் பதவியை ஏற்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.
இலங்கையில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு தேவையான பிரசாரங்களை மேற்கொள்ள தேவையான தைரியம் எனக்கு இருக்கிறது. மக்கள் மத்தியில் தைரியமாக என்னால் செல்ல முடியும்” - என்றார்.