நெல் கொள்வனவில் சிக்கல் - கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்
நெல்லிற்கான விலையினை உரிய நேரத்தில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தவில்லை என தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இரணைமடு சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து நெல் சந்தைப்படுத்தல் நிலையம், நெல் கொள்வனவு நிலையம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது.
இதன்போது விவசாயிகள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்பொழுது நெல்லினை 48 ரூபாய் தொடக்கம் 50 ரூபாய்க்கே கொள்வனவு செய்வதாகவும் தமக்கு அறுவடை முடிவில் செலவீனமே 85 ரூபாய் முடிவடைகின்றதாகவும் குறிப்பிட்டனர்.
நெல் கொள்வனவு நிலையம்
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
"கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையினரின் களஞ்சிய சாலைகள் அனைத்துமே வெறுமனே காணப்படுகின்றன.
இருப்பினும் நெல் கொள்வனவு உரிய காலத்தில் உரிய விலையில் மேற்கொள்ளப்படவில்லை.
அவ்வாறு இருக்கையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நெல் கொள்வனவு நிலையமும் அதற்கான களஞ்சிய சாலையும் ஏன் அமையப் பெற்றுள்ளது, உங்களால் நெல் கொள்வனவை உரிய காலத்தில் உரிய விலையில் செய்ய முடியாவிட்டால் நெல் கொள்வனவு நிலையத்தை மூடிவிட்டு நீங்கள் கொழும்புக்கு சென்று விடுங்கள்.
நாங்கள் வேறு ஏதாவது தொழிலுக்குச் சென்று பிழைக்கின்றோம்'' என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகன் மற்றும் நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
