படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை 'சந்திரா பெர்னாண்டோவுக்கு' விசேட திருப்பலி
குருத்துவ பட்டாபிசேக விழாவின் 50ஆவது ஆண்டு நிறைவு
1988ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் குருத்துவ பட்டாபிசேக விழாவின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு மறைமாவட்ட பேராலயத்தில் ஆத்ம சாந்திக்கான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித மரியாள் பேராலய வளாகத்தில் அமைந்துள்ள அவரின் சமாதியில் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அருட்தந்தை ஏ.ஜேசுதாசனின் தலைமையில் இன்று முற்பகல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இன்றைய விசேட திருப்பலியானது மட்டக்களப்பு மாவட்ட நல்லிணக்க சமாதானத்துக்கான பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந் நிகழ்வுகளில், மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், மற்றும் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் சகோதரர்கள், உறவினர்கள், எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சமாதியில் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி நிகழ்வும் நடைபெற்றது.
தமிழ் தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்தவர்
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து 1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.
1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.
தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் இலக்கு நோக்கி பயணிக்க ஆரம்பித்த காலத்தில், ஆக்கிரமிப்புப் படையினரால் மக்கள் அழிக்கப்பட்டார்கள், சுற்றிவளைப்புக்கள், கைது செய்து விசாரணையின்றி அடைத்து வைத்தல் போன்ற பல்வேறு மக்களின் துன்ப துயரங்களிற்கு எதிராக இவர் துணிந்து களமிறங்கி சேவை செய்துள்ளார்.
அருட்தந்தை சந்திரா பெர்ணாண்டோ தமிழ் தேசிய விடுதலையை உள்ளுணர்வோடு நேசித்ததனால் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் ஏற்றுக் கொண்டவராக காணப்பட்டார்.





