யாழில் தலைதூக்கும் நோய்த்தாக்கம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் (Ketheeswaran) தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நால்வர் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கு சிக்கன்குனியா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் கூடுதலான அவதானத்தைச் செலுத்தியுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார சேவைகள்
இதேவேளை, இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் சுகாதார ஊழியர்கள் 166 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை இரத்தினபுரி மாவட்டத்தில் 1,465 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
மேலும், கடந்த மாதம் 3 ஆம் திகதி முதல் சப்ரகமுவ மாகாண ஆளுநரின் தலைமையில் டெங்கு பணிக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நாட்டில் 14,600க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
