தமிழர் தரப்பு மௌனிக்கச்செய்யப்பட ஆரம்பமாய் அமைந்து போன “சித்திரை - 25"
ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாறு என்பது பல பரிமாணங்களைக் கொண்டது.
அந்தப் பரிமாணங்களில் ஈழத்தமிழர்களாகிய நாம் எமது பூர்வீகத்தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளில் எமக்கான சுயாட்சி உரிமையைக்கோரிய போது சிறிலங்காவின் சிங்கள - பௌத்த மேலாதிக்க மனோபாவம் இங்கு எதுவுமே இல்லை என்ற தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.
இதனால், இங்கு நமக்கானதை போராடியே பெற்றுக்கொள்ளவேண்டும் என உணர்ந்துகொண்ட ஈழத்தமிழர்கள் அரசியல் ரீதியாகவும் ஆயுதரீதியாகவும் தமது இருப்புக்காக சிறிலங்காவின் சிங்கள தேசத்தோடு போராட வேண்டியதாயிருந்தது.
சிறிலங்காவின் அரச படைகளுக்கு எதிராக தமிழர் தரப்பு மேற்கொண்ட போரியல் நடவடிக்கைகள் நான்கு கட்டங்களாக வகைப்படுத்தப்படுகின்றன.
குறித்த நான்கு கட்டங்களில் தமிழர்கள் போரியல் ரீதியாக மேற்கொண்ட சாதனைகள் சொல்லில் மாளாதவை. அந்த அடிப்படையிலையே இன்றைய நாளும் கூட மிக முக்கியமான ஒரு நாளாகும்.
சுயாட்சி உரிமையைக் கோரி சுமார் மூன்று தசாப்தங்கள் ஆயுதமேந்திப் போராடிய இனம் அன்று மௌனிக்கச்செய்யப்பட காரணமாய் அமைந்து போன, இன்றைய சித்திரை 25 ஆம் திகதியையும் - அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற இன அழிப்பின் நிகழ்வுகளையும் ஐபிசி தமிழ் கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது.
