மத்திய கிழக்கில் போர் பதற்றம்! உள்நுழைய எத்தனிக்கும் அரபு நாடு
இஸ்ரேலுக்கும் (Israel) ஈரானுக்கும் (Iran) போர் ஆரம்பிக்கலாம் என்ற நிலைப்பாடு காணப்படுகின்ற நிலையில், ஈராக்கும் இந்த விவகாரத்தில் உள்ளே வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பிராந்திய போரின் தொடக்கமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கிடையில் ஆரம்பித்த இந்த போர் தற்போது, இஸ்ரேல் - ஹிஸ்புல்லா தொடங்கி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேரடிப் போர்
இஸ்ரேல் மற்றும் ஈரான் (Iran) இடையே நேரடியாகப் போர் மூளும் என்ற ஒரு மோசமான சூழலே நிலவி வருகிறது. முதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மீது ஈரான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது.
அதற்குப் பதிலடி தரும் வகையில் கடந்த மாதம் இறுதியில் ஈரான் மீது இஸ்ரேல் பதிலுக்குத் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வருகிறது.
இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈராக்கில் இருந்து நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக்கின் தாக்குதல்
ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் குழு ஈராக்கில் செயல்பட்டு வரும் நிலையில், அதன் மூலம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
இதற்காகத் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கூட ஈராக்கிற்குச் சத்தமில்லாமல் அனுப்பும் நடவடிக்கையிலும் ஈரான் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பு சாதாரண அமைப்பு இல்லை. கடந்த ஓராண்டில் மட்டும் அவர்கள் இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அவர்கள் மூலமாகவே இந்தத் தாக்குதலையும் நடத்த ஈரான் திட்டமிட்டுவருகிறது.
பிராந்திய போர்
ஈராக் பல்வேறு தேவைகளுக்காக ஈரானையே நம்பி இருக்கிறதால் தனது நாட்டில் இங்கும் ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகள் மீது பெரியளவில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
இஸ்ரேல் மீது தங்கள் நாட்டில் இருந்து எந்தவொரு தாக்குதலையும் நடத்த வேண்டாம் என்று ஈராக் பிரதமர் முகமது அல்-சூடானி தொடர்ந்து ஈரான் தரப்பிற்கு வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், அங்குள்ள ஈரான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் கடந்த ஓராண்டாக இஸ்ரேல் மீது சிறு சிறு தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈராக்கில் இருந்து பெரியளவில் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை இப்படித் தாக்குதல் நடந்தால், அதற்குப் பதிலடி வழங்க இஸ்ரேல் தயாராகவுள்ளது. ஈராக் நாட்டில் உள்ள முக்கியமான 30 இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி அரபு நாடுகள் உள்ளே வந்தால் அது பிராந்திய போராக வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |