73 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் கோட்டாபய!! 73 நாட்களாக அவரை வெளியேறுமாறு வீதியில் தவிக்கும் மக்கள்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, அரச தலைவர் செயலகத்திற்கு எதிரில் ஆரம்பிக்கப்பட்ட கோட்டா கோ கம போராட்டம் இன்றுடன் 73 நாட்கள் பூர்த்தியாகியுள்ளன.
அதேவேளை, 1949 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி பிறந்த சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்று தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் இன்று பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட்களுக்கு வரிசைகள், எரிபொருளுக்கு வரிசைகள், எரிவாயுவுக்கு வரிசைகள், அனைத்துக்கும் வரிசைகள் என்று நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கும் மக்களுக்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள கூட வரிசைகள் என மக்களின் அன்றாட வாழ்க்கை வரிசைகளில் நின்றே கழிகின்றன.
தமது எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்ற அச்சம் நாளுக்கு நாள் இலங்கையின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகரித்தே செல்கின்றது.
இன்றைய இக்கட்டான நிலமைகளுக்கு ராஜபக்ச குடும்பமே முழுவதுமாக காரணம் என மக்கள் கோஷமிட்டபடி உள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு முன் யுத்த வெற்றியை கொண்டாடிய ஒரு மக்கள் இப்பொழுது அதே யுத்த வெற்றி நாயகரை இன்று வீட்டுக்குப் போ என்று விரட்டுகிறார்கள்.
ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தனர் மக்கள். ஆட்சியை மாற்றினால் அவர்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என நம்பி போராட்டத்தில் இறங்கினார்கள்.
அரசாங்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கிய இளைஞர்கள் காலிமுகத்திடலில் “கோட்டா கோ கம” என்ற ஒரு போராட்டக் கிராமத்தை உருவாக்கினார்கள்.
முதலில் கோட்டாபயவை வெளியேறுமாறு போராடினார்கள். பின்னர் மகிந்தவை வெளியேறுமாறு அலரி மாளிகை முன் "மைனா கோ கம" என்ற ஒரு போராட்டக் கிராமத்தை உருவாக்கினார்கள்.
கடந்த மே 9 திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியமை அடுத்து அரசுக்கு எதிராக போராடியவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இருப்பினும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைய தலைமுறை தமது போராட்டத்தை கைவிடவில்லை.
கோட்டா வீட்டுக்கு போ என்ற கோஷத்தை மேலும் உக்கிரமடைய செய்தார்கள். அந்த கோஷத்துக்கு உயிர் கொடுத்தார்கள். அரச தலைவரின் மாளிகையை முற்றுகையிட்டு இன்றுடன் 73 நாளாக போராடுகின்றார்கள்.
இவ்வாறிருக்க, மக்களின் அழுகுரல்களுக்கு செவிசாய்க்காத அரச தலைவர், இன்று தனது 73 ஆவது பிறந்தநாளை காண்கிறார்.

