சீன - இந்தியாவின் கிடுக்குப் பிடிக்குள் இறுகிய இலங்கை! திணறும் ரணில்
சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் கடினமான பணியை அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்கொண்டுள்ளநிலையில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் வருகை, அவருக்குத் தலைவலியை ஏற்படுத்தும் என இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு நடந்து கொண்டிருக்கின்றது. இதற்குச் சில காலங்கள் எடுக்கலாம். இதற்கு மத்தியில் இந்தியாவும் சீனாவும் வெவ்வேறு பக்கங்களில் இழுத்துக்கொண்டிருக்கின்றன.
இதன்போது இரண்டு பாரிய நாடுகளுக்கிடையில் கொழும்பு இறுக்கமான கயிறு நடையை நடத்துகின்றது. இதனையெல்லாம் ரணில் விக்ரமசிங்க சமாளித்துக்கொண்டிருக்கும்போது போதாக்குறைக்குக் கோட்டாபயவும் நாடு திரும்புகின்றார்.
கோட்டாபயவின் ஆதரவாளரான ரணில்
கோட்டாபயவுக்காக ரணில் என்ன உதவி செய்தாலும் விமர்சிக்கப்படுவார். அதேவேளை பொதுமக்களில் பெரும்பாலானோர் ரணிலைக் கோட்டாபயவின் ஆதரவாளராகவே கருதுகின்றனர்.
எனவே, ரணில் துக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அவர் ஒரு புத்திசாலியான அரசியல்வாதி, இந்தத் தந்திரமான பிரச்சினையைத் துணிச்சலுடன் எதிர்கொள்வார் என்றும் அந்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், சீன இந்திய ஆதிக்கப் போட்டியை சமாளிக்கும் திறனை இலங்கை கொண்டிருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது.
குறிப்பாக, பொருாளதாரத்தினால் நலிவடைந்து இலங்கை திண்டாடிக் கொண்டிருக்கையில், சர்வதேச நாடுகளின் தலையீடுகளானது ஆட்சியை பொறுப்பெடுத்த ரணிலுக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது.
சர்வதேச நாடுகளையும், உள்நாட்டு நெருக்கடிகளையும், பொருளாதார சிக்கல்களையும், ராஜபக்ச தரப்புக்களால் ஏற்பட்டிருக்கும் அரசியல் முரண்பாடுகளையும் சமாளித்து ஆட்சியைக் கொண்டு செல்லும் வலுவை ரணில் கொண்டிருக்கிறாரா இல்லையா என்பதை அடுத்துவரும் மாதங்களில் காண முடியும் என்கின்றன சர்வதேச ஊடகங்கள்.

