மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசின் அறிவிப்பு
மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியும் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன (Chandana Abayarathna) தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகமொன்று வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் உறுதி
அவர் மேலும் தெரிவிக்கையில், ”மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், அரச அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்துக்குப் பொருத்தமற்றது.
ஆகவே, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. எனினும், மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய முறையில் நடத்துவதா என்பதே தற்போதுள்ள பிரச்சினை.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தாலும் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாகக் குறிப்பிட முடியாது.
மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டதன் பின்னர் தாமதமில்லாமல் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்த முடியும். என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
