செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் : அரசின் நிலைப்பாட்டை அறிவித்த நீதி அமைச்சர்
யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அரசாங்கம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.
அத்துடன் மனிதப் புதைகுழி அகழ்வுக்காக 11.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர்
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் ஒத்துழைப்புடன், அரசாங்கம் தற்போது நாடு முழுவதும் 14 பாரிய புதைகுழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பேரழிவு மரணங்கள், காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் இழப்புகளை அனுபவித்தவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முழுமையான அரசியல் விருப்பம், தற்போதைய அரசாங்கத்திடம் உள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், மனித புதைகுழி விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள்
இதேவேளை, நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது 8 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரையிலும் மீட்கப்பட்ட மற்றும் அடையாளம் காணப்பட்ட மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 80 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (23) 18 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
