பிரித்தானியாவின் லூட்டன் தமிழ் சங்கம் நடத்திய மாபெரும் பொங்கல் விழா
பிரித்தானியாவின் லூட்டன்-டன்ஸ்டபிள் தமிழ்சங்கம் நடத்திய மாபெரும் பொங்கல் நிகழ்வு பல்வேறு தமிழ் கலை வடிவங்களுடன் மிகவும் சிறப்புற நடைபெற்றது.
நிகழ்வில் பறைக் குழுவின் இசை, தவில் நாதஸ்வரம் முழங்க, முழு பாரம்பரியத் தோற்றத்துடன் காவடி மற்றும் கோலாட்ட நிகழ்ச்சிகள் ஆர்வமாக நிகழ்த்தப்பட்டன. இந்த விழாவை சிறப்பிக்க லூட்டன் மற்றும் டன்ஸ்டபிள் கவுன்சிலில் இருந்து மூன்று கவுன்சிலர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்தனர்.
மாணவர்களின் அசாத்திய திறமை
பல்வேறு வகையான நடனங்கள், பாடல்கள், பேச்சு, கவிதை, வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் லூட்டன்-டன்ஸ்டபிள் தமிழ் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிற நிகழ்ச்சிக்குண்டான கலைஞர்கள் நிகழ்த்தினர்.
லூட்டன் கல்விக்கூட பாடசாலை மாணவர்கள் கவிதைப் பாராயணம், பேச்சு, கிராமிய நடனம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். லூட்டன் தமிழாலயம் மாணவர்கள் கோலாட்ட நடனம் மற்றும் சில அரச மற்றும் சமூக நாடகங்களையும் செய்து ஆர்ப்பாட்டமிக்க வாழ்த்துக்களைப் பெற்றனர். தமிழ் கல்விச்சோலை மாணவர்கள் வில்லுப்பாட்டு மற்றும் காவடி, கோலாட்ட நடனம் மூலம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.
பொதுமக்களை மகிழ்வித்த நிகழ்வுகள்
விருந்தினர்கள் மற்றும் ஏனைய கலைஞர்களின் நடனம், பாடல், பேச்சு மற்றும் வயலின், பியானோ போன்ற வாத்திய இசை நிகழ்ச்சிகள் பொதுமக்களை மகிழ்வித்தன. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஈஸ்வரதாசன், அவருடன் இணைந்த ஈழத்து மூத்த கலைஞர்கள் தயாநிதி, குணாபாலன், ஈஸ்வரதாசன் நிகழ்த்திய சிறப்பான நாடகங்களும் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தன.
நிகழ்ச்சிகளின் இறுதியில், சிறப்பாக பங்கெடுத்த மாணவர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பரிசளிப்பு வழங்கி அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன. இவ்விழாவில் பங்கெடுத்த அனைத்து நிர்வாக உறுப்பினர்களுக்கும், மேடைக் குழுவினருக்கும், தொழில்நுட்ப குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியை லூட்டன் தமிழ் சங்கம் தெரிவித்து கொள்கிறது.
இவ்வாறு வழமைக்கு மாறாக தமிழ்ப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும்வகையில் இந்தப் பொங்கல் விழா மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டமை அனைவருக்கும் பெருமிதத்தைத் தருவதாகும்.