கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஹரிணிக்கு தொடரும் அழுத்தம்!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படவில்லை எனவும், உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்தார்.
எனினும், அதற்கு முன்னர் பிரதமர் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களை பிரதமர் முறையாக செயல்படுத்தத் தவறியதால், இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு குழுவை நியமித்த ஜனாதிபதி, சீர்திருத்தங்களை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் உடனடியாக கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து பொருத்தமான ஒருவரிடம் அதை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
500 மில்லியன் நிதி
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “புதிய கல்வி சீர்திருத்தங்களை முறையாக செயல்படுத்தத் தவறியதால் அரசாங்கம் 500 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழந்துள்ளது.

இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தால் புதிய கல்வி சீர்திருத்தங்களை முறையாக முன்வைக்க முடியாவிட்டால், புதிய அரசியலமைப்பு போன்ற பிரச்சினைகளை தற்போதைய அரசாங்கத்துடன் விவாதிப்பது நகைப்புக்குரியது.
நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள சுவிட்சர்லாந்தில் இருந்து அவசரமாக வந்ததாக பிரதமர் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். அந்தக் கருத்து முற்றிலும் தவறானது. ” என தெரிவித்தார்.
எனவே, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்படவில்லை எனவும், அது பொருத்தமான நேரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், எதிர்வரும் வாரம் நடைபெறும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாட எதிர்ப்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் மேலும் தெரிவித்தார்.
You May Like This....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |