கிழக்கு பல்கலையில் நடந்த கொடூரம் - தமிழர் வரலாற்று வலிகளின் இன்னுமோர் அத்தியாயம் (காணொளி)
தாயக நிலப்பரப்பில் தமிழரின் வரலாறு என்பது கடந்து வந்த பாதை மிகவும் வலிகள் நிறைந்தது.
இலங்கை தீவில் தென்பகுதி சிங்களவர்களால் தமிழர்களை ஒரு சுதேசிய இனம் என்பதனை ஏற்க மறுக்கும் மனோபாவத்தில் தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் மீது தமது கொடூரமான மனோநிலையை படுகொலைகளாக அரங்கேற்றியிருந்தனர்.
வடக்கே வல்வெட்டித்துறை தொடங்கி கிழக்கே வீரமுனை வரை அப்பாவிப் பொதுமக்கள் மீது ஈவிரக்கமின்றிய படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.
அவற்றுள் கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் அல்லது வந்தாறுமூலை வளாகப்படுகொலைகள் எனப்படும் அரச இராணுவ மற்றும் அரச சார்பு ஒட்டுக்குழுக்கள் மற்றும் இஸ்லாமிய ஊர்காவற்படை ஆகியன இணைந்து மேற்கொண்ட திட்டமிட்ட படுகொலைகளால் உலகமெங்கிலும் வாழக்கூடிய தமிழர்களின் நெஞ்சிலும் ஆறாத ரணமாக துயர் தோய்ந்து படிந்துள்ளது.
கடந்த 1990 ஆம் வருடம் ஒன்பதாவது மாதத்தின் 5 ஆவது நாளன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழர்கள் 158 பேர் ஒட்டுக்குழுக்களின் உதவியோடு இலங்கை இராணுவத்தினரால் ஆயுதமுனையில் சுற்றி வளைக்கப்பட்டு இராணுவ முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வே கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள்.
மனித உயிர்கள் மதிக்கப்படாமல் கடத்தப்படுவதும் பின் கொலை செய்யப்படுவதுமாக உயிர்களின் பெறுமதி அறியாத மனிதர்களாக இலங்கையின் சிங்கள அரச படைகள் மீண்டும் ஒருதடவை தமக்குத்தமே முத்திரை குத்திக்கொண்டன .
குறித்த மிலேச்சத்தனமான உயிர்பறிப்பின் படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்று இன்றோடு 32 ஆண்டுகள் கடக்கின்ற போது போதும், காணல் நீராக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியும் அதன் பால் தமிழர்களின் இதயங்களில் நீறுபூத்த நெருப்பாக நினைவுகள் எரிந்துகொண்டிருப்பதும் வழக்கமாகிப்போனது எனலாம்.
இலங்கையில் இடம்பெற்ற தமிழர்கள் மீதான படுகொலைகளுக்கான நீதி மிக நீண்டகாலமாக கோரப்பட்டாலும் சிறிலங்கா அரசினுடைய பதில் என்னவோ மௌனமே.
இன்றைய நாளில் அரச படைகளின் ஆயுதமுனை உயிர் பறிப்புகளினால் கிழக்குப் பல்கலைகழக அகதி முகாம்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அத்தனை உறவுகளையும், ஈழத் தமிழர்களின் வரலாற்று வலியை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் விதமாக ஐபிசி தமிழ் இன்றைய நாளில் நினைவேந்துகிறது.

