ஆதாரங்களை சமர்ப்பித்தால் பதவியில் இருந்து விலகுவேன்: சபையில் சிறீதரன் அதிரடி
நான் சொத்துக்கள் குவித்து வைத்திருந்தால் அல்லது யாருக்காவது மதுபானசாலை அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் என்மீது சட்டநடவடிக்கை எடுத்து எனது பதவியை பறிப்பதற்கு பூரண சம்மதத்தை தெரிவிக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் (S.Sritharan) தெரிவித்துள்ளார்.
இன்றைய (08.11.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலில் நான் ஈடுபட்டதாக குறிப்பிட்டு உண்மைக்கும் அறத்துக்கும் மாறான வகையில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவினால் (Chamara Sampath Dassanayake) எனக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனது தேசத்து மக்கள் சார்ந்து பொது நலன் மற்றும் மக்கள் நலனில் கவனம் எடுத்து எனது முடிவுகளை மிகத் தெளிவாக அரசியலமைப்பு சபையில் முன்வைத்துள்ளேன். எனது கட்சிக்காகவோ, வெளிநபர்களின் நெருக்குதலுக்காகவோ எனது முடிவுகளை நான் மாற்றிக்கொள்ளவில்லை.
எந்தவித வெளிப்புற அழுத்தமும் என்மீது பிரயோகிக்கப்படவில்லை, பிரயோகிக்கவும் முடியாது என்பதைக் கடந்த ஓராண்டு காலமாக நேர்மையுடனும், கண்ணியத்துடனும் நிரூபித்துள்ளேன்.
சிவில் புத்தி பெரமுன என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவரால் நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் நான் சொத்துக்கள் குவித்து வைத்திருப்பதாக கடந்த ஜூலை மாதம் முறைப்பாடு செய்யப்பட்டதாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் பார்வையிட்டு இருந்தேன்.என தெரிவித்தார்.
செய்திகள் வெளிவந்த பின்னர் வெளிப்படையான விசாரணைகளை செய்து உண்மையை வெளிப்படுத்துமாறு கூறியிருந்தேன். இன்று 3 மாதங்கள் ஆகியும் நிதி குற்றப்புலனாய்வு பிரிவால் எந்த முடிவுகளும் வெளியிடப்படவில்லை.
எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்களது பெயரிலோ அல்லது பினாமிகள் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் விசாரணை செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு பகிரங்கமாகக் கேட்கிறேன்.
எனது பெயரிலோ, எனது சிபாரிசிலோ கடந்த காலங்களில் மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் ஏதும் பெற்றிருந்தால் உடன் வெளிப்படுத்தி என்மீது சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றேன்.
சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக பணியாற்றிய போது அவர் ஒரு தமிழ் பெண் அதிபரை முழங்காலில் இருத்தி வைத்து விசாரித்த ஒரு மனநோயாளி என்பதையும் தான் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
உடனடி விசாரைணை நடத்தி என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் பட்சத்தில் என்மீது சட்ட நடவடிக்கை எடுத்து என் பதவியை பறிப்பதற்கு பூரண சம்மதம் தெரிவிப்பதுடன் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |