கடன் பெறுவதை பட்டாசு கொளுத்தி கொண்டாடும் ரணில், மொட்டு அரசு வெட்கப்பட வேண்டும்!
"கடன் பெறுவதன் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவதை பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்ற ரணில் மற்றும் மொட்டு அரசு வெட்கப்பட வேண்டும்."
இவ்வாறு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசு வெட்கப்பட வேண்டும்
தொடர்ந்து அவர்,
"நாட்டை நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிட்டு, சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்தியவர்கள், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றமைக்கு வெட்கப்பட வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்தவுடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்தும் கடன் பெற முடியும் என அதிபர் ரணில் கூறுகின்றார், இதனால் நாடு தொடர்ந்தும் கடன் சுமைக்குள்தான் இருக்கும். உற்பத்தித் துறையை கட்டமைத்து பொருளாதார மீட்சியை ஏற்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.
மேலும், கடனைப் பெறும்போது நாட்டின் பொருளாதாரத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
