ஐஎம்எஃப் கடன் அங்கீகாரம் - இந்திய நிதி அமைச்சருக்கு நன்றி நவின்ற சிறிலங்கா!
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடனுதவிக்கான அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சிறிலங்கா அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இலங்கை கடனுதவியை பெற்றுக் கொள்வதற்கு இந்திய அரசாங்கம் பெருமளவில் உதவியிருந்ததாக இந்திய நிதியமைச்சருடனான சந்திப்பில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட நினைவூட்டியுள்ளார்.
கலந்துரையாடல்
இந்திய முதலீடுகளை இலங்கைக்கு ஈர்ப்பது மற்றும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவும் கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக இந்திய ரூபாய் வர்த்தக விரிவாக்கம் மற்றும் இலங்கைக்கு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
தொடர் சந்திப்புக்கள்
அத்துடன், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பில் முன்னோக்கி செல்லும் வழி குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக்கான உதவிகள் தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிர்மலா சீதாராமனுக்கும் மிலிந்த மொரகொடவுக்கும் இடையில் சந்திப்புக்கள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
