இனி இலங்கை விற்பனைக்கு
இலங்கை பெரிதும் எதிர்பார்த்த சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிட்டிக் கொண்டதால் தற்போது சுருதிகள் மாறுபாடாக ஒலிக்கின்றன.
இன்று காலை இது குறித்து மக்களுக்கு சிறப்பு உரையினை வழங்கிய அதிபர் ரணில் விக்ரமசிங்க இனிமேல் இலங்கை வங்குரோத்தான நாடு அல்ல எனவும் மாறாக கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு எனவும் சொல்லிக் கொண்டார்.
அத்துடன் நாட்டின் வழமையான கொடுக்கல் வாங்கல்கள் திரும்பும் என்பதால் இதுவரை விதிக்கப்பட்ட சில இறக்குமதிகளுக்கான தடைகள் படிப்படியாக நீக்கப்படும் எனவும் உறுதியளித்திருக்கின்றார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறினார்.
உண்மையில் என்ன உள்ளடக்கங்கள் உள்ளன?
இதுவரை சர்வதேச நாணயத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் உண்மையில் என்ன உள்ளடக்கங்கள் உள்ளன என்பது தெரியாத நிலையில் நாளை இது நாடாளுமன்றத்திற்கு வருகின்றது.
ஆனால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தில் பாதகங்களை கண்டுபிடித்தாலும் கூட, அதனால் பலனேதும் இல்லை.
ஏனென்றால் சர்வதேச நாணய நிதியம் தனது முடிவை வெளிப்படுத்தி விட்டது.
இன்று பகல் ரணில் விக்ரமசிங்க தனது உரையை வழங்கிக் கொள்ள முன்னர், நேற்றைய தினம் இலங்கையின் உள்ளூர் நேரப்படி இரவில் கடனுக்குரிய அங்கீகாரம் வோஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்டவுடன் அதனை நாட்டு மக்களுக்கு உடனடியாகவே அறிக்கை வடிவில் ரணில் விக்ரமசிங்க வழங்கியிருந்தார்.
வரலாற்று மைல் கல்
அந்த அறிக்கையில் சுதந்திரத்திற்குப் பின்னரான கடந்த 75 வருட காலத்தில் ஒருபோதும் இல்லாத வகையில் நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் நிலவும் காலத்தில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி ஒரு வரலாற்று மைல் கல் என மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
கடந்த வருடம் ஜூலை மாதத்தில் அப்போது அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மக்களின் போராட்டங்கள் காரணமாக பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேறிய பின், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற தான் அதற்கு பின்னர் இலங்கைத் தீவின் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் முன்னுரிமைக்காக சில கடினமான முடிவுகளை எடுத்ததாகவும் சற்று கவலையுடன் கூறியிருந்தார்.
ஆக மொத்தம் கடந்த வருடம் முதல் இலங்கையில் அடிக்கடி பேசுபொருளாக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கடன் என்ற விடயம் இப்போது சுலபமாக முடிவுக்கு வந்திருக்கிறது.
48 மாதங்களுக்குரிய 3 பில்லியன் கடன் தொகை தவணையின் முதல் தொகுதியான 333 மில்லியன் அமெரிக்க டொலர் இன்னும் இரண்டு நாட்களில் இலங்கையின் கணக்கில் வரவிடப்படும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
ஆனால் பொருளாதார நெருக்கடிகளை தீர்க்கும் வண்ணம் நிதிகள் கிட்டிக் கொண்டாலும், இலங்கையின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து ரணில் விக்ரமசிங்க இன்றைய தனது உரையில் எதனையும் சுட்டிக் காட்டவில்லை.
எனினும் சர்வதேச நாண நிதியம் வோஷிங்டனில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு தாம் ஒரு போதும் பரிந்துரை செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டியது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தலைவர் இந்த விடயத்தை தெளிவாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் போன்ற உள்ளக ஏற்பாடுகளில் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டியிருந்தார்.
சர்வதேச நாணய நிதிய தலையீடு
எவ்வாறெனும் சர்வதேச நாணய நிதியம் நேரடியான தலையீடுகளை செய்யாது என்றாலும், அதனுடன் டீல் போட்ட சிறிலங்கா அரசாங்கம் வேறு வழி இன்றி அதன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றது.
இதனால் இனிமேல் சிறிலங்கா அரசாங்கத்தின் முதுகில் வெள்ளை யானையாக இருந்து அழுத்தும் கொடுக்கும் நட்டப்பட்ட நிறுவனங்களுக்கு சவாலான காலம் வரக்கூடும். இதனை புதிய செய்திகளும் ஆதாரப்படுத்துகின்றன.
அந்த வகையில் சிறிலங்காவின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான சிறிலங்கா டெலிகொம் அதேபோல் லங்கா ஹொஸ்பிட்டல் நிறுவனம் ஆகியவற்றில் அரசாங்கத்தில் இருக்கும் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்துவிட்டது.
இந்த நிறுவனங்களில் உள்ள அரசாங்கத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கி இருப்பதால், இந்த முடிவை சிறிலங்காவின் திறைசேரி செயலாளர் குறிப்பிட்ட நிறுவனங்களின் பணிப்பாளர் சபைக்கு அறிவித்திருப்பதால் இனிமேல் இந்த நிறுவனங்களில் உள்ள அரசாங்கப் பங்குகள் வெளித்தரப்புக்கு இல்லையென்றால் இந்த நிறுவனத்தில் உள்ள அரசாங்க பாங்குகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.
ஆகையால் சர்வதேச நாணயத்தின் ஒப்பந்தத்தின் ஊடாக நாடு விற்பனை செய்யப்படும் நிலைமை எழுந்துள்ளதான எதிர்க்கட்சிகளின் கூக்குரல்களில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமலும் இல்லை.
ஆனால் இவ்வாறாக விற்பனை செய்யப்படும் அரசாங்கத்தின் பங்குகளை கொள்வனவு செய்யப்போகும் தரப்பு எந்த தரப்பு என்பது தான் இப்போது கேள்விக்குரிய வினாவாக உள்ளது.
