ஐ.எம்.எப்ஐ சந்தித்த ஜே.வி.பி
புதிய இணைப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதிய குழுவுக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று(14) (முற்பகல்) கொழும்பு சங்ரிலா ஹோட்டலில்இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது,ஒன்றரை மணித்தியாலம் நடைபெற்றுள்ளதுடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பினதும் மோசடி, ஊழல்களை தடுத்தலுடன் தொடர்புடைய செயற்பாங்குகளினதும் முன்னேற்றம்,மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிராத தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கை பற்றியும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் விசாரிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பில்,சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவம் செய்து பீற்றர் புறூவருக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சேர்வத் ஜஹான், கெட்சியரினா ஸ்விட்சென்கா (Katsiaryna Svieydzenka) மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்து தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் முதித்த நாணயக்கார மற்றும் பொருளாதாரப் பேரவையின் அங்கத்தவர்களான பேராசிரியர் அனில் ஜயந்த, பேராசிரியர் சீதா பண்டார, கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும மற்றும் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோர் பங்குபற்றினர்.
முதல் இணைப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதிய குழுவை தேசிய மக்கள் சக்தியினர் இன்று (14) சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெறும் என அந்த கட்சியின் பொருளாதார சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி முன்னதாக தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த சந்திப்பில் அரசாங்கத்தினால் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார அழுத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தேசிய மக்கள் சக்தி
அதேவேளை, அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த 11ஆம் திகதி நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கேற்றிருந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குறித்த சந்திப்பை புறக்கணித்திருந்தது.
இதன்போது,மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லையெனவும்,
தமது கட்சியுடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டிய தேவை நிதியத்துக்குக்கு இருக்கும் பட்சத்தில், அவர்களின் கோரிக்கைக்கமைய சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய தேசிய மக்கள் சக்தி தயார் என சுனில் ஹந்துன்நெத்தி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |